ராஜபக்சக்களை ஆதரிக்கும் ரணில் தரப்பினர் : வரவு செலவு திட்டத்தை தொடர்ந்த அரசியல் நகர்வு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்கள் மாத்திரமே காரணம் அல்ல என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வேறு அர்த்தங்களை வழங்க எந்த தரப்பினரும் முயற்சிக்க கூடாதென கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களும் அவரது சகாக்களுமே காரணம் என ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பு தொடர்பில் தற்போது பலர் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை முற்றாக ஏற்றுக் கொள்ள முடியாதென அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தாலும், அவர்கள் மாத்திரமே அதற்கு காரணமென கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவு திட்டம்
இதேவேளை, இலங்கையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, சிறிலங்கா அரசாங்கத்தால் எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல சலுகைகள் வழங்கப்படுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து வெளிவர, அனைவரும் தமது கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |