இராணுவத்தினருக்கான ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்பட வேண்டும் : சரத் வீரசேகர கோரிக்கை!
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சேவையாற்றிய இராணுவத்தினருக்கான ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கோரியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் ஓய்வூதிய தொகையுடன் ஒப்பிட்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பாதிப்பு
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 1983 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்திருந்தது.
இதில் 29 ஆயிரம் இராணுவத்தினர் உயிரிழந்ததோடு 14 ஆயிரம் பேர் அங்கவீனமானர்கள்.
சிலர் உயிர் தப்பியுள்ள நிலையில், தற்போது அவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
இராணுவத்தினருக்கான ஓய்வூதியம்
எனினும், அவர்களுக்கான ஓய்வூதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. தற்போது ஓய்வு பெறும் இராணுவத்தினருக்கு அதிகளவான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
எனினும், யுத்தத்தின் போது இராணுவத்தில் சேவையாற்றிய தரப்பினருக்கு இவ்வாறான தொகை வழங்கப்படுவதில்லை.
35 வருட சேவையாற்றிய மேஜர் ஜெனரல் ஒருவருக்கு தற்போது 40 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படுகிறது.
எனினும், 2020 ஆம் ஆண்டு ஓய்வூதியமடைந்த ஒருவருக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தொகை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், அவர்களின் ஓய்வூதிய தொகையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய நாடு. இதனை நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனினும், இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என பிரகடனப்படுத்தப்பட்டதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
தற்போது நாம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் சிக்கியுள்ளோம்.
சர்வதேச நாடுகளின் உதவி
எவ்வாறாயினும், வங்குரோத்து நாடு என்பதை பிரகடனப்படுத்தாது சர்வதேச நாடுகளின் உதவியுடன் எம்மால் மீண்டு வந்திருக்க முடியும்.
இந்த நிலையில், இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை மக்கள் வரவேற்றிருந்ததை எம்மால் காணக்கூடியதாக இருந்தது“ என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |