சாந்தனின் இழப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சாந்தன் எனப்படும் சுதேந்திர ராஜாவுக்கு இறுதிவரை நீதி கிடைக்காமைக்கு, தமிழ் அரசியல்வாதிகளே காரணம் என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டிய விடயம், சாதாரண பிரச்சினையாக கருதப்பட்டமையே இதற்கான காரணம் என ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் சென்னையில் நேற்று சாந்தன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ள நிலையிலேயே, ராஜ்குமார் ரஜீவ்காந்த் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள்
மேலும் தெரிவித்த அவர், “சிறையில் இருந்த போதும், சாந்தன் விடுதலையான போதும் அவரை இலங்கைக்கு நாடு கடத்த இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கவில்லை.
அத்துடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்திருந்தார்கள். எனினும், என்ன பயன்?
சாந்தனை விடுதலை செய்ய யாரும் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகள்
இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள், தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக மாத்திரம் குரல் கொடுக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியுள்ளனர்.
சாந்தனின் பிரச்சினை மாத்திரமின்றி தமிழ் மக்களின் காணி பிரச்சினை உள்ளிட்ட பல நீண்ட கால சிக்கல்களை தீர்க்க அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
நான் தொடர்ந்தும் தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுகிறேன். இதன் பின்னணியில் அவர்களது குற்றம் மாத்திரமே காரணமாக உள்ளது“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |