கோட்டா வழியில் செல்கிறார் ரணில் : நிரோஷான் பெரேரா குற்றச்சாட்டு
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தேர்தல் வாக்குகளுக்காக இஸ்லாமிய நாடுகளை பகைத்துக் கொண்டதனால் ஜெனிவா கூட்டத்தொடரில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கவில்லை.தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறே செயற்படுகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(07) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
சர்வதேச சமூகம்
“தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஜெனிவாவுக்கு ஒன்றை கூறுகின்றார் ,நாட்டில் பிறிதொன்று செயற்படுத்தப்படுகிறது.
சர்வதேச சமூகம் முட்டாள்கள் அல்ல என்பதை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்கிரமசூரிய மீது 3 இலட்சத்து 3227 அமெரிக்க டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவருக்கு அமெரிக்க வாஷிங்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவரை பாதுகாப்பதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சஅரசாங்கம் இராஜாதந்திர மட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.
ஆனால் இவருக்கு எதிராக இலங்கையில் முறையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இலங்கையின் அரச தலைவர்கள் மோசடி செய்த நிதி சாலிய விக்கிரமசூரிய ஊடாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள விவகாரம் தொடர்பில் அமெரிக்காவில் எப்.பி.ஐ.நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.” என்றார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |