சிறப்புச் சட்டம் நாட்டுக்கு அவசியம் - ரணில் விசேட அறிவிப்பு
கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பில் பொதுக் கொள்கை அடிப்படையிலான புதிய சட்ட மூலம் உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையினால் இந்தச் சட்ட மூலம் உருவாக்கப்பட்டு அது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்காத ஏனைய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடுப்பூசி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்த போதிலும் , 7 மாதங்களின் பின்னரே அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது பாரிய குற்றமாகும் என்று முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்த விசேட அறிவிப்பொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
சுகாதார தரப்பினர் கொவிட் சிகிச்சையளித்தல் உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு தற்போது சோர்வடைந்துவிட்டனர். இதனால் எமது நாட்டின் வைத்திய கட்டமைப்பு வீழ்ச்சியடைக்கூடும். முறையான திட்டமிடலொன்றின் மூலம் இவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
இதற்கு மருத்துவதுறையினரின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். எனினும் இலங்கையில் இதுவரையில் மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை. எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். கொவிட் கட்டுப்படுத்தலுக்கான மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. இது தொடர்பிலும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
கொழும்பு , பேராதனை, ருஹூணு, யாழ்ப்பாணம் மற்றும் றாகம ஆகிய பல்கலைக்கழங்களிலும் தற்போது காணப்படுகின்ற ஆய்வு கூடங்களுக்கு மேலும் பல உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆய்வுகளை முன்னெடுக்கின்ற இந்தியா, பிரித்தானியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும். எனவே இது தொடர்பில் பொதுக் கொள்கை மற்றும் தயார்ப்படுத்தல் தொடர்பான சட்டமூலம் அமைச்சரவையினால் உருவாக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியும் அமைச்சரவையும் இதனைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர வேறு யாருக்கும் இதனை கையளிக்கக் கூடாது. இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும் நாம் இதுவரையில் அதனை செய்யவில்லை.
எனவே மேற்கூறியதைப் போன்று சட்டமூலத்தை தயாரிக்குமாறு அமைச்சரவையிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.