மொட்டுக்கட்சியை துண்டு துண்டாக கூறுபோட்ட ரணில்
அதிபர் ரணில் விக்ரமசிங்க மொட்டுக் கட்சியை மூன்று, நான்கு தரப்பாக பிரித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டா தெரிவித்துள்ளார்.
நேற்றைய(12) ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விஜயத்தின் நோக்கம் யாது?
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர். தற்சமய விஜயத்தின் நோக்கம் யாது என்பது தெளிவாக தெரிவதாக இல்லை.
ஊழல் மோசடிகளை நிறுத்துவது சார்ந்த கலந்துரையாடல்களுக்கு சமூகமளித்துள்ளதாக கூறப்பட்டாலும் அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட ஏனைய ஒப்பந்த உடன்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நாட்டில் ஊழல் மோசடிகளற்ற சாதாரண மக்கள் சார் அரசாள்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே மே 9 செய்தி சொல்லும் விடயமாகும்.
ஊழல் நிறைந்த மொட்டு உறுப்பினர்களின் ஆதரவில் உள்ள அதிபர் ரணில் விக்ரசிங்கவால் இந்த ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை சமர்ப்பிக்க முடியாது.
ஆளும் தரப்பினுள் பிரச்சினை
ஒழிந்து பதுங்கி இருந்தவர்கள்,மக்களுக்கு பயந்து அல்டோ கார்களில் பயணித்தவர்கள் இன்று வீட்டில் தனியாக இருக்கிறோம் முடியுமானால் தம்மை வந்து தாக்குமாறு வெளிப்படையாக சவால் விடுக்கின்றனர். இதன் பெருமை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கே உரித்து.
இன்று ஆளும் தரப்பினுள் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. அதிபர் ரணில் மொட்டுக்கட்சியை மூன்று நான்கு தரப்பாக பிரித்துள்ளார்” - என்றார்.
