பெரமுன எம்.பிக்கள் தொடர்பில் ரணில் எடுத்த தீர்மானம்
வீடுகளை மீளக் கட்டுவதற்கு ரணில் கொள்கை தீர்மானம்
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் சொத்துக்களை இழந்த அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளையும் மீளக் கட்டுவதற்கு பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக இதனைத் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனது ஆட்சியில் நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை
வீடுகளை அழித்தவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், தனது ஆட்சியில் நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 80 அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.