தமிழர்கள் மீது அக்கறையா...! ரணிலின் திட்டத்தை போட்டுடைத்த எம்.பி
அதிபர் ரணில் விக்ரமசிங்க தேர்தலை இலக்காக கொண்டு மாத்திரமே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளாரே தவிர , தமிழ் மக்கள் மீது கொண்ட அக்கறையால் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சன்ன ஜயசுமண, மக்கள் ஆணையற்ற அதிபர் ரணிலுக்கு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை ஏமாற்றும் செயற்பாடு
மேலும் கருத்து தெரிவித்த அவர், “காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்காக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தத் திருத்தம் 1987 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஆட்சியமைத்த 7 நிறைவேற்றதிகார அதிபர்களில் எவரும் இதில் கை வைக்கவில்லை.
அடுத்த அதிபர் தேர்தலுக்கு தயார் நிலை
மக்கள் உண்பதற்கு உணவின்றி தவித்துக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் , உள்ளுராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தி, பொதுத் தேர்தலும் இன்றி அடுத்த அதிபர் தேர்தலுக்கு தயாராவதற்காகவே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு செயற்படுகிறார்.
மாறாக தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள இரக்கத்தினால் அல்ல. இது தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் ஏமாற்றும் செயற்பாடு” - என்றார்.
