நாடகமாடும் ரணில்- நெற்றிக்கு நேரே கூறிய கூட்டமைப்பு - மகிழ்ச்சியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி குழு கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் தயாராக இருக்கின்றார்களா என டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து வெளியிட்ட சுதந்திர மக்கள் காங்கிரசின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் ,
சர்வதேசத்திற்கு தாம் ஒரு தூயவர் என காண்பிக்க ஸ்ரீலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முயலக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்தும் அரசியல் நாடகம்
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரணில் விக்ரமசிங்க, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்துகின்றார்.அவர் தமிழ் கட்சிகளை அழைத்து, அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் உள்ளது. எனினும் அதனை கொடுக்கவில்லை. நான் அதனை வழங்கப் போகின்றேன் என கூறுகின்றார்.
என்ன கூறுகின்றீர்கள் யார் அதனை வழங்கவில்லை? வழங்காத எத்தனை அரசாங்கத்தில் அவர் இருந்திருக்கின்றார். திடீரென பிறந்தது போன்று அவர் செயற்படுகின்றார்.இவை அனைத்தும் அரசியல் நாடகமாகும்.
என்னை மன்னித்துவிடுங்கள். மாகாண சபை முறைமையின் கீழ் உள்ள அதிகாரங்களை வழங்குவதற்கு நான் இருந்த அரசாங்கங்களால் முடியாமல் போயுள்ளது. அது மாத்திரமல்ல, நான் இருந்த கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தில், நாம் மாகாண சபையை முழுமையாக மூடினோம்.அதற்கும் நானே பொறுப்புகூற வேண்டும்.அவ்வாறு கூறுவார் ஆயின், அவரின் கருத்தை செவிகொடுத்து கேட்க முடியும்.அவை எதனையும் கூறாமல், நேற்று பிறந்தது போன்று திடீரென வந்து, குழந்தை போன்று இவ்வாறு கூறுகின்றார்.இது நாடகத்தின் இரண்டாவது கட்டம்.
முட்டாள் தனமான கருத்துக்களை
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்குள் எமது நாட்டிலுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமாயின், அந்த திருத்தத்திற்குள் இருக்க வேண்டும்.13 ஆவது திருத்தம் தொடர்பாக ஏனைய கட்சிகள் போன்று முட்டாள் தனமான கருத்துக்களை நாம் கூற மாட்டோம்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்குள் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களவர்கள் என மூவினத்தவர்களுக்கும் பலமான நாட்டை கட்டியெழுப்பும் வாய்ப்பு உருவாகுமாயின், அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும்.அது உண்மை.
இவர்கள் 13 ஆவது திருத்தம் குறித்து பேசுவது தேர்தலுக்காகவே. நீங்கள் நாடகமாடுகின்றீர்கள் என அந்த இடத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறியமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.அது சிறந்தது.உண்மையில் பொய்யான செயற்பாடே மேற்கொள்ளப்படுகின்றது என்றார்.