அடுத்த இலக்கு ரணில் - விரட்டப்படும் நாள் குறித்து பகிரங்க எச்சரிக்கை
ராஜபக்சக்கள் மக்களால் எப்படி விரட்டப்பட்டார்களோ அதேபோன்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி விரட்டியடிக்கப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைதி வழியில் போராடியவர்கள் மீது தாக்குதல்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "காலிமுகத்திடல் மக்கள் போராட்டம் ஜூலை 14 ஆம் திகதி வெற்றியுடன் முடிந்து விட்டது என்றும், அதன் பின்னர் அங்கு கிளர்ச்சிக்கான ஆயத்தங்களே நடைபெற்றன என்றும், அதனையே படையினர் அடக்கியுள்ளனர் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
காலிமுகத்திடலில் அன்று போராடியவர்கள் மக்கள்தான். இன்றும் போராடுபவர்கள் அதே மக்கள்தான். இந்நிலையில், அமைதி வழியில் போராடும் மக்களைக் கிளர்ச்சியாளர்கள் என்று பொய் கூறி அவர்கள் மீது ஆயுதப் படைகளைக் கொண்டு புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க தாக்குதல் நடத்த உத்தரவிட்டமை மாபெரும் அராஜகம் ஆகும்.
இது போராடும் மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ரணில் வீட்டுக்குப் போ' என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை.
ஓகஸ்ட் 9 ஆம் திகதி ரணில் விரட்டியடிக்கப்படுவார்
இதற்கு மதிப்பளித்து ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும். இல்லையேல் ராஜபக்சக்கள் போல் அடுத்த மாதம் 9 ஆம் திகதி மக்களால் அவர் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படுவார்" எனக் குறிப்பிட்டார்.
மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகியிருந்தார்.
ஜூன் 9ஆம் திகதி பசில் ராஜபக்ச விலகியிருந்தார். ஜூலை 9ஆம் திகதி கொழும்பில்
மக்கள் எழுச்சிப் போராட்டத்தால் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச
தப்பியோடி கடந்த 14ஆம் திகதி பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
