மக்களை பலியிடாதீர்கள் - அரசுக்கு ரணில் அட்வைஸ்
நாட்டின் பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தி, மக்களை பலியிட வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட விசேட அறிவிப்பொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி மருந்தை செலுத்துவதற்கு 30 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும் இவ்வாண்டுக்குள் அதனைப் பெற்றுக்கொள்வது கடினமானது.
ஆகவே கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதிய சிந்தனை அவசியம் என்பதுடன், புதிய திட்டங்களை வகுக்க வேண்டும்.
முதல் கட்டத்தில் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது கட்டமாகும் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்தே வழங்கப்பட வேண்டும்.
கடந்த நவம்பர் மாதம் தடுப்பூசி மருந்து கொள்வனவிற்கென 200 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்திருந்தால் தற்போது தடுப்பூசி மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது.
அரசாங்கத்தினால் இந்தியப் பிரஜைகள் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில், இந்திய வகை மரபணு மாற்றமடைந்த வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.