கரடிபோல உள் நுழைந்த ரணில்!! தமிழர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வீசிய ராஜபக்ச பெருஞ்சூறாவழியில் முதலில் தூக்கிவீசப்பட்டவர் ரணில் விக்ரமசிங்கதான். இனி அவருக்கு மீட்பே இல்லை, தன் சொந்தத் தொகுதியில்கூட வெல்ல முடியாத நிலைக்கு அரசியலில் சரிவைச் சந்தித்துவிட்டார் எனக் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இந்தச் சரிவோடு அவரோடு ஒட்டியிருந்த பலரும் கட்சி மாறினார்கள். இவ்வாறு தனித்துவிடப்பட்டிருந்தவருக்குக் கட்சிக்குக் கிடைக்கவேண்டிய தேசியப்பட்டியல் என்ற ஓர் அதிர்ஷ்டம் கிடைத்தது.
ரணிலின் ஆளுமை
தேசியப்பட்டியலின் மூலம் மிகவும் தாமதமாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ரணில் விக்ரமசிங்க தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை அஸ்திரமாகப் பயன்படுத்தினார். அதுவேதான் ரணிலின் ஆளுமைப் பாணி. பதற்றமின்மை, அவசரப்படாமை, பொறுமை, அவமானங்களுக்கு உணர்ச்சிவயப்படாமை, விமர்சனங்களை இயல்பாக எடுத்துக்கொள்ளல், தெளிவான தூரநோக்கு போன்ற ஆளுமைப் பண்புகளை நிரம்பப்பெற்றவரான ரணில், நிதானமாகக் காய்களை நகர்த்தினார்.
கடந்த இரண்டு வருடங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குள் பல ஆட்சிக் குழப்பங்கள், கட்சி தாவல்கள் நிகழ்ந்தபோதிலும், அவர் தனியே நின்றார். அவ்வப்போது இலங்கை எதிர்கொள்ளப்போகும் பொருளாதார இடர்கள் குறித்த தெளிவூட்டலை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் வழங்கிக்கொண்டிருந்தார்.
ராஜபக்சக்களின் ஊழல், வினைத்திறனற்ற நிர்வாகம், கொரோனா பாதிப்புகள் போன்றன சிங்கள மக்களால் சிங்கள மக்களுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட அரசாங்கம் படுதோல்விகண்டது.
இலங்கை வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத பொருளாதாரச் சரிவினால் சிங்கள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். சேமிப்பற்ற – அன்றாடம் உழைப்பதை அன்றே உண்டு, களித்து வாழும் அவர்களது வாழ்க்கை முறையை இந்தப் பொருளாதாரச் சரிவு மிகமோசமாகப் பாதித்தது. ஓரளவுக்கு அரசியல் தெளிவுள்ள சிங்கள மக்களின் நடுத்தர வர்க்கத்தினர் இந்நிலைமையை விளங்கிக்கொண்டு, இதற்கு காரணகர்த்தாக்கள் ராஜபக்சவினரே என்ற முடிவுக்கு வந்தனர்.
எனவே தான் ராஜபக்சக்களுக்கு எதிராகப் போராடத்தொடங்கினர். சமநேரத்தில் இந்தப் பேரிடரில் இருந்து தம்மை மீட்டு வரக்கூடிய ஒரே நபர் ரணில் விக்ரமசிங்கவே என்ற நம்பிக்கையையும் அவ்வப்போது வெளிப்படுத்தினர். ரணிலின் இந்த நம்பிக்கைக்கு, ரணில் விக்ரமசிங்க சர்வதேசத்துடன் கொண்டிருக்கின்ற நல்லுறவுதான் காரணம்.
சர்வதேசத்தை அரவணைக்கும் ரணிலின் திட்டம்
ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவருடன் தொடர்பை பேணியபடிதான் இங்கிருக்கின்ற தூதரகங்கள் இயங்குகின்றன. இலங்கை தீவு என்ன பிரச்சினையை எதிர்கொண்டாலும் அது குறித்து கருத்துக் கேட்கப்படுபவர்களில் முதல் நபராகவும் அவர் இருக்கிறார்.
மேற்கு சார்ந்த திறந்த பொருளாதாரக் கொள்கையிலும், வெளியுறவுக் கொள்கைகளில் மென்போக்கைக் கடைபிடிப்பவராயும் இருக்கின்றமையால்தான் சர்வதேச நாடுகள் ரணிலை விரும்புகின்றன. ரணிலின் இம் மென்முகம்தான் இப்போது இலங்கைக்குத் தேவைப்படுகின்றது என்பதை சிங்கள மேற்தட்டு, நடுத்தர மக்கள் நன்கறிந்து வைத்திருக்கின்றனர்.
ராஜபக்சக்கள் மேற்குநாடுகளுடன் கடைபிடித்த வன்முகம்தான் இன்றைய இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை விளங்கிவைத்திருக்கின்றனர். இலங்கை அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் இந்த வர்க்கத்தினரை, சிங்கள ஆட்சியாளர்கள் அறிந்து வைத்திருக்கின்றனரோ இல்லையோ, மேற்கு நாடுகள் நன்றாக ஆழமறிந்து வைத்திருக்கின்றன. அவர்தம் நாடியறிந்து தமக்கு சாதகமான தரப்பொன்றை இலங்கையின் அதிகார பீடத்தில் வைத்துக்கொள்வதில் எப்படியோ வென்றுவிடுகின்றன.
ரணில் விக்ரமசிங்கவின் மீள் எழுச்சி
ரணில் விக்ரமசிங்கவின் மீள் எழுச்சியின் பின்னாலும் இந்த அரசியலே வேலைசெய்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ரணில் விக்ரமசிங்க பிரதமராகியிருக்கின்றார். அதுவும் ஓர் ஆச்சரியமிக்க பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஜனநாயக முறைப்படி மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் ஒருவர் பிரதமராக வருவதே நியாயமானது. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரைத் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்கி, அவரையே பிரதமராக்கி அழகு பார்ப்பதெல்லாம் இத்தீவில் மட்டுமே நடக்கும் ஆச்சரியம்.
நிறைவேற்று அதிகார பலமுடைய ஜனாதிபதி தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோன்று மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் மக்கள் ஜனநாயகம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பலவீனமடையும். எந்த ராஜபக்சவினர் தேவையில்லை என மக்கள் நிராகரித்தார்களோ, அவர்களை மீள அரியணை ஏற்றவும் இதேபோன்றதொரு அதிகாரத் துஸ்பிரயோகத்தைப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.
மக்கள் ஜனநாயக முறைப்படி இதனை எதிர்ப்பினும், சில நாட்கள் ஊரடங்கும், சுட்டுத்தள்ளுவதற்கான அனுமதியும் அப்போராட்டங்களை வலுவிழக்க செய்துவிடும். இதனாலேயே தற்போதைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸ்ஸநாயக்க, பௌத்த பிக்குகள் சிலர், கோட்டாகோகம போராட்டக்காரர்களில் சிலர் இந்த நியமிப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றர். புதிய பிரதமருக்கு எதிராகவும் போராடத் தயார் என்கின்றனர். இதற்கெல்லாம் ரணில் விக்ரமசிங்க, “சரி போராடுங்கள். எக்காரணம் கொண்டும் பொலிஸார் உங்களை அகற்றமாட்டார்” எனப் பதிலளிக்கிறார்.
“இப்போது செய்யவேண்டியது பெரும்பான்மை நிரூபிப்பல்ல, மக்கள் மூவேளை பசியாறுவதும், நலிவடைந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதுமே ஆகும்” என்கிறார். இந்த ஒற்றைப் பதிலில், மேற்கு நாடுகள் விரும்பும் ஜனநாயகப் பாதுகாவலர் தான் என்பதை இங்கிருக்கின்ற தூதரகங்களுக்கும், போராடுவதற்கான சகல உரிமையும் உங்களுக்கு உண்டு என்பதை போராட்டக்காரர்களுக்கும் ரணில் சொல்லிவிட்டார். அதுதான் அவரின் அரசியல்.
இனி போராட்டக்கோசம் வலுவிழக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட, காலி முகத்திடலில் கூடியிருப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையும். ஒரு கட்டத்தில் ஏன் பேராடுகிறோம் என்று தெரியாமலேயே சிலர் குந்திக்கொண்டிருப்பர். அத்தோடு “கோட்டாகோகம” இழுத்து மூடப்படும்.
ரணில் போன்றதொரு ஜனநாயகவாதி ஆட்சிப் பீடமேறினால் ஸ்திராமானதொரு அரசாங்கம் அமையும் என மேற்கு நாடுகள் நம்புகின்றன. ஸ்திரமான ஆட்சியமைந்தால், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, அமெரிக்கா, இந்தியா என ரணிலை விரும்பும் நாடுகள் நன்கொடைகளை – கடன்களை வாரிவழங்கத் தயாராக இருப்பதையும் இந்நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
மீளவும் ஜனநாயகம் மலர்ந்தால், சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும். ஏனைய ஏற்றுமதித்துறைகளும் முன்னேற ”கோட்டாகோகம” போராட்டக்காரர்களது பிரதான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும். முடிவில் ரணில் விக்ரமசிங்கவினால், சிங்களவர்களுக்கே உரிய சுபீட்சமானதொரு நாடு கிடைத்துவிடும். அந்த சுபீட்சத்தின் கூப்பில் குந்தியிருந்தபடி ராஜபக்சக்களை சிங்கள மக்கள் கூவியழைத்து ஆட்சிபீடமேற்றுவர். இதுவொரு அரசியல் சங்கிலியாகத் தொடரும்.
ரணிலால் தமிழர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
ரணில் விக்ரசிங்கவின் மீள்வரவினால் தமிழர்களுக்கு என்ன நன்மையென்று பார்த்தால், இன்னொரு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்றே கணிப்பிட முடிகிறது. பிரதமராகப் பதவியேற்க ஒரு சில நாட்களுக்கு முன்னர், “இனிமேல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எவ்வித தொடர்பும் இல்லை” என்று ரணில் சொல்லியிருந்தார்.
பொதுவாக சிங்களவர்கள் ரணில் விக்ரமசிங்கவை நிராகரிப்பதற்கு, அவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படக்கூடியவர், அவர்களுடன் இணைந்து நாட்டைப் பிரித்துக்கொடுத்துவிடுவார் போன்ற காரணங்களை முன்வைப்பர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ரணில் மீதான விமர்சனமும், அதற்கு அவர் கொடுத்த பதிலடியும் சிங்கள மக்கள் மத்தியில் நன்றாகவே எடுபட்டன. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது மேல் நிலையில் உள்ளவர்களுக்கும் ரணில் விக்ரமசிங்கவிற்குமான உறவு ஏழேழு பந்தமுடையது என்பதை தமிழ் மக்கள் அறிவார்.
கடந்த நல்லாட்சியின் போது ரணில் விக்ரமசிங்கவின் பதவியைக் காப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னென்ன பொய்களையெல்லாம் அவிழ்த்தெரிந்தார்கள் என்பதையும் தமிழ் மக்கள் நன்றாகவே நினைவுவைத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளை வலுவிழக்கச் செய்த தந்திரம்
இவ்வாறு கூட்டமைப்பினர் ரணில் விக்ரமசிங்கவைக் காப்பாற்றிக்கொண்டு செல்வதற்குப் பிரதியுபகாரமாக அவர் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. சமாதான உடன்படிக்கை மூலம், தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தி அவர்களை அரங்கில் இருந்து அகற்றுவதற்கு மூலகாரணியாகத் தொழிற்பட்டார்.
விடுதலைப் புலிகள் தொடர்பான சர்வதேச மதிப்பீடுகளை தவறாக வழிநடத்துவதற்கும், தடைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் தன்னால் இயன்ற அத்தனை பணிகளையும் செய்தார். எல்லாக் காரியங்களையும் முடித்துவிட்டு, ராஜபக்சக்களிடம் ஆட்சியைக் கையளித்தார். ராஜபக்சக்கள் உலகமே வெட்கித் தலைகுனியுமளவுக்கு போரொன்றை அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தி முடித்தனர்.
கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச சமூகமாவது நீதியை வழங்க வேண்டும் என 2009 ஆண்டிலிருந்து உலகத் தமிழர்கள் போராடிக்கொண்டிருக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு 2015 இல் மீள் பிரவேசமானார் ரணில். இங்கு போர்க்குற்றமுமில்லை, விசாரணையுமில்லை, எல்லாமே முடிந்துவிட்டது. மிஞ்சிப்போனால் உள்ளக விசாரணை நடத்திக்கொள்கிறோம் என்கிற அளவிற்கு தமிழர் தொடர்பான சர்வதேச நிலைப்பாட்டை ரணில் கொண்டுவந்து முடித்தார். இதன் ஊடகப் பிரச்சாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கொண்டே நடத்தியும்முடித்தார். அதிகாரமற்றிருந்த ராஜபக்சக்களுக்கு எதிராக இறுகிவந்த சர்வதேசக் கவனிப்பை கவனச்சிதைவுக்குட்படுத்தினார்.
கரடிபோல உள் நுழைந்த ரணில்
இப்போது ராஜபக்சக்களின் கர்மவினை அவர்தம் சொந்த மக்களாலேயே எழுதப்படக் காத்திருந்த நேரத்தில், கரடிபோல நுழைந்திருக்கிறார் ரணில் விக்ரமசிங்க. இனிவரும் நாட்களில் நாடாளுமன்றத்தினுள் பெரும்பான்மையை நிரூபித்து, ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையை ஆதரித்து அதில் அவர் வெற்றிபெற்றாலும், ராஜபக்சக்கள் எவ்வித பாதிப்புமின்றி அரங்கிலிருந்து ஓய்வுக்கு அனுப்பப்படுவர்.
தமிழ் மக்களோ, சிங்கள மக்களோ எதிர்பார்த்த ராஜபக்சக்களுக்கான தண்டனை நீர்த்துப்போகச் செய்யப்படும். போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தலில் வல்லவரான ரணில் இதிலும் வெற்றிபெறுவார்.
எனவே ரணில் விக்ரமசிங்கவின் மீள்வருகையானது நீதியைக் கோரி நிற்கும் மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் தரப்போவதில்லை. அது சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி. ஏற்கனவே இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் என்று ஒரு தொகுதியினர் இல்லை என அறிவித்துவிட்டார்.
வடக்கில் 1000 பௌத்த விகாரைகளை அமைப்பதற்கான திட்டம் ஒன்று கிடப்பில் இருக்கிறது. இனி தேசிய பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் பல திட்டங்கள் நடைமுறைக்கு வரும். அத்திட்டங்கள் எஞ்சிக்கிடக்கின்ற தமிழர்கள் வளங்களையும், வளமூட்டிகளையும் சிங்கள பௌத்த தேசியவாதத்துடன் கரைத்துச் செல்லும்.
உண்மையில் ரணில் விக்ரமசிங்க தமிழர் விடயத்தில் ராஜபக்சக்களைவிட மோசமானவர். தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட வரலாற்றை மீள்வாசித்தால், தமிழர் அழிப்பிற்கான வலையின் முதல் மூன்று முடிச்சிக்களையும் போட்டவர் ரணிலாகத்தான் இருப்பார். ஏனைய சிங்கள ஆட்சியாளர்கள் குருட்டுத்தனமாகவும், அதிகார மோகத்திலும் புத்திசாதுர்யமற்ற நிலையில் அவ்வலையை வீச நினைத்தே சிக்கிக்கொண்டனர். ஆனால் ரணில் அப்படியானவரல்ல. தெளிவான பார்வையோடு சிங்கள பௌத்த தேசியவாதத்தைக் கட்டமைத்துக்கொண்டு செல்வதில் கைதேர்ந்தவர். ஆனால் இவ்விடயத்தை சிங்கள மக்கள் இன்னமும் விளங்கிக்கொள்ளவேயில்லை என்பதுதான் உண்மை.