சர்ச்சைக்குரிய சம்பவத்தை அரங்கேற்றியது ரணிலும், மகிந்தவுமா?
கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடாளுமன்றில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்தை, தானும் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவும் திட்டமிட்டு அரங்கேற்றியதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறுவது அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கூறியுள்ளார்.
சிறிகொத்தாவில் நேற்றுமுன்தினம்(21) இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், கரு ஜயசூரியவின் இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“கடந்த 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்டு, கதிரைகள் தூக்கியெறியப்பட்டு சர்ச்சைக்குரிய அமைதியின்மை நிலையொன்று ஏற்பட்டது.
அதனை நானும் தற்போதைய பிரதமரும் கலந்துரையாடித் திட்டமிட்டு நிகழ்த்தியதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டிருக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பில் நேர்காணல் ஒன்றில் அவர் எனது பெயரை நேரடியாகக் கூறியிருக்காவிட்டாலும், நேர்காணலை நடத்தியவர் எனது பெயரை குறிப்பிட்டுக்கேட்கின்றபோது கரு ஜயசூரிய அதனை மறுதலிக்கவில்லை. இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது” என்றார்.