முதலிடத்தில் இலங்கை! மீண்டெழுவது கடினம்; கைவிரித்தது மத்திய வங்கி!
முதலிடத்தில் இலங்கை
தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் சுமார் எழுபது நாடுகள் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்த நாடுகளில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இன்று (26) காலை வங்கிகளின் தலைவர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச வட்டி விகிதங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சிறிய வாய்ப்பு உள்ளதாகவும் சரியான கொள்கைகளை எடுத்தால் நெருக்கடியின் தாக்கத்தை குறைக்க முடியும் என்று பிரதமர் விளக்கினார்.
கைவிரித்தது மத்திய வங்கி
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைக் காண்பது கடினம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், அத்தியாவசிய வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் கடன் ஒத்திவைப்பு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி இன்றைய சந்திப்பில் தெரிவித்தது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வங்கியாளர்கள் பலர் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
