கோட்டாபய கூறுவதை ஏற்க மாட்டேன்: ரணிலே சிறந்த தலைவர்..! பசில் அதிரடி அறிவிப்பு
கோட்டாபய ராஜபக்ஸவை அதிபர்த் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் - முஸ்லிம் மக்கள்தான் என்று அவரது 'சதி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும், அவர்கள்தான் விரட்டினார்கள் என்று தான் கருதவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் போது தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை நினைவு கூர்ந்த பசில் ராஜபக்ஷ, கட்சியைச் சேர்ந்த சிலர் தமது வேர்களை மறந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அதிபர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் இல்லை எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தகுதியானவர் ரணில்
இது தொடர்பில் அவர் கருத்து கூறுகையில், "அதிபர் வேட்பாளருக்குத் தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கதான். பொருளாதார ரீதியில் வீழ்ச்சிப் பாதையில் சென்ற இந்த நாட்டை அவர் மீட்டெடுத்திருக்கிறார்.
அனைத்துப் பிரச்சினைகளும் மெல்ல தீர்ந்துகொண்டு வருகின்றன. முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இதை நான் ரணிலிடம் கூறியிருக்கின்றேன்." - என்றார்.
இந்த நிலையில், எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தமது கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான யோசனையை பொதுஜன பெரமுனவின் தலைமையிடம் சமர்ப்பிக்க அமைச்சர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு மே பேரணியின் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |