எதிர்வரும் வாரத்தில் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் ரணில்
ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வாரத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் திரைமறைவிலான பேச்சுவார்த்தையை ரணில் நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த விமர்சனங்களுக்கு தனது உரையின் ஊடாக அவர் முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பயணம் மற்றும் நாட்டை மீட்பதற்கான தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 05 ஆம் திகதி சிறப்புரையாற்றவுள்ளார் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சி உதயமாகி செப்ரெம்பர் 06 ஆம் திகதியுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணையவழி ஊடாக இந்த உரையை ஆற்றவுள்ளார். இதன்போது கட்சியின் புதிய பயணம் தொடர்பில் அவர் தெளிவுபடுத்துவார் எனவும் வஜிர அபேவர்தன கூறியுள்ளார். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது எனவும் எதிர்காலம் பற்றிய எதிர்ப்பார்ப்பு இளம் தலைமுறையினருக்கு இல்லாது போயுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சுகாதாரம் தொடர்பான தேசிய வேலைத்திட்டம், பொருளாதாரத்தை மீட்பதற்கான தேசிய வேலைத்திட்டம், அறிவுசார் தேசிய வேலைத்திட்டம் உள்ளிட்டவற்றையும் ரணில் விக்ரமசிங்க தனது உரையில் முன்வைப்பார் என்று வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகிய இருவரும் ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவினதும், அவருக்கு நெருக்கமான கொழும்பு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரரினது ஆலோசனையை பெற்றுவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அமைச்சர் நாமல் ராஜபக்சவை அரியணையில் அமர்த்துவதற்கும், தற்போதைய எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தவும் ரணில் விக்கிரமசிங்க, துணை போவதாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.