காணாமல் ஆக்கிய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதி கோரி தாம் முன்னெடுக்கும் போராட்டங்களை மழுங்கடிப்பதற்கான மற்றுமொரு திட்டமாகவே சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இழப்பீட்டிற்கான நிதி ஒதுக்கும் நடவடிக்கை அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கிய குற்றங்களை மேற்கொண்டுள்ளதை தாமே ஒப்புக்கொள்ளும் வகையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சி
சிறிலங்கா அரசாங்கத்திடம் நீதி கேட்டு, அந்த முயற்சி தோல்வி கண்ட நிலையிலேயே தாம் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
போராட்டத்தை குழப்பும் சிறிலங்கா அரசின் முயற்சி தமது உறவுகளைத் தேடும் போராட்டம் 2, 500 நாட்களை அண்மித்துள்ளதாகவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி கோரிய தமது போராட்டத்தை குழப்புவதற்கும் நோக்குடன் இழப்பீடுகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து சிறிலங்காவின் கடந்த அரசுகள் முயற்சித்த போதிலும் தமது போராட்டம் சர்வதேச நீதியை வேண்டி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமது போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சியாக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.
ஓ.எம்.பி பெயரில் வீணடிக்கப்பட்ட பணம்
ஓ.எம்.பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் ஊடாகவும் தமக்கு இழப்பீடு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு வெளிநாடுகளால் 1.4 ரில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் அந்தப் பணமானது.
பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகளுக்கான சம்பளமாகவும், அவர்களுக்குரிய கொடுப்பனவு, கட்டட வசதிகளுக்கே செலவு செய்யப்பட்டதாகவும் லீலாதேவி ஆனந்தநடராஜா சுட்டிக்காட்டினார்.
அந்த பணமானது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றமிழைத்த கடந்த கால சிறிலங்கா அரசுகள்
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கென வரவு செலவுத் திட்டத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்திருப்பதானது, தமது குற்றத்தை ஒப்புக்கொள்வதை போன்றே அமைவதா லீலாதேவி ஆனந்தநடராஜா கூறியுள்ளார்.
உறவொன்று காணாமல் போனால், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையே முதலில் அறிய வேண்டும் எனவும் எனினும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு கடந்த கால அரசுகளே காரணம் என்பதை இந்த நிதி ஒதுக்கீடு மூலம் மறைமுகமாக ரணில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேறு எந்தவித விசாரணைகளைப் பற்றியும் கதைப்பதை விடுத்து, நேரடியாக இழப்பீட்டை வழங்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றே தீர்மானிக்க வேண்டியுள்ளது என லீலாதேவி ஆனந்தநடராஜா கூறியுள்ளார்.
இழப்பீடு அல்ல, உறவுகளே வேண்டும்
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம் ஒப்படைத்த, சரணமடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட உறவுகளையே தேடிக்கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசிடம் இருந்து எந்தவொரு இழப்பீட்டையும் தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர்களிடம் பெறப் போவதும் இல்லை எனவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசிடம் இருந்து நீதியே கிடைக்காது என முடிவுக்கு வந்த தாம், அவர்களிடம் இருந்து இழப்பீட்டை எதிர்பார்க்கப் போவதில்லை எனவும் லீலாதேவி ஆனந்தநடராஜா சுட்டிக்காட்டினார்.
இந்த இழப்பீட்டானது, சிறிலங்கா அரசின் வேறு தேவைகளுக்காக தமது பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.