தமிழர் தரப்புடனான முக்கிய நிகழ்ச்சி நிரல் இன்றி பேசிய ரணில் - சம்பந்தன் சீற்றம் (படங்கள்)
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிகார பரவலாக்கம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முரண்பட்டுள்ளார்.
அதிகாரப் பரவலாக்கத்தை தவிர்த்து சிறிலங்கா அதிபர் ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதாக சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டமூலம்

இந்தியாவிற்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் அதிபர் கலந்துரையாடினார்.
ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளதாகவும் திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அதிபர் கூறினார்.
ஊழல் ஒழிப்புச் சட்டம், எதிர்வரும் ஜுலை 19ஆம் திகதி நாடாளுமன்றக் குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
| தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் கொடுத்த வாக்குறுதி |
அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள்

இந்த நிலையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காவல்துறை அதிகாரம் தவிர்ந்து முழுமையான அதிகாரம் கொண்டது என்று தெரிவித்த அதிபர், அதிகாரப் பகிர்வுத் திட்டங்களை எடுத்துரைத்ததுடன் அதனை நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையிலான உடன்பாட்டிற்கு நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.