ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான விசாரணைகளில் குழப்பம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய பயணத்தின் போது 16.6 மில்லியன் ரூபாய் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வாரஇறுதி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதா அல்லது இந்த விவகாரம் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் அடிப்படையில் ஆதாரங்கள் போதுமானதாக இல்லையா என்பது தொடர்பில் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசாரணை
சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசாரணையை மேற்பார்வையிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, விசாரணை தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக குறித்த ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி, குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினுள் இரண்டு கருத்துக்கள் இருப்பதாகவும், விசாரணையில் இருந்து இராஜினாமா செய்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, ரணில் விக்ரமசிங்க மீது வழக்குத் தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ஆறு பக்க அறிக்கையை சமர்ப்பித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் குறித்த செய்தியில், “விசாரணையின் முன்னணி மேற்பார்வை அதிகாரியான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், வசந்த பெரேராவின் கருத்துக்கு முரணான கருத்தை சமர்ப்பித்து, கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் விக்ரமசிங்க மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
அறிக்கை
எனினும், தனது அறிக்கையில், கியூபாவிலிருந்து நியூயோர்க்கிற்கும் இலங்கைக்கும் பயணம் செய்யும்போது பிரித்தானியா வழியாக செல்வது ரணில் விக்ரமசிங்கவிற்கு புதிதல்ல எனவும், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்புக் கடிதம் கிடைத்தாலும் இல்லாவிட்டாலும், அவர் இங்கிலாந்தில் ஒரு முறை தங்க வேண்டியிருக்கும் எனவும் வசந்த பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவில் தனது தனிப்பட்ட பயணத்திற்காக பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதைத் தடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள் இந்த கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளனவா என்பது தொடர்பில் தற்போது ஒரு தீவிரமான சந்தேகம் எழுந்து வருகிறது.
இம்மாதம் 28 ஆம் திகதி குறித்த வழக்குத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குறித்த செய்தியாலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் உள் நடத்தையினாலும் இந்த சந்தேகம் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |