நீதிமன்ற உத்தரவை மீறும் ஜே.வி.பியினர் - ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி எப்படி நாட்டை மீட்பார்கள்!
"தற்போது சீரான முறையில் பயணிக்கின்ற அரசின் செயல்பாடுகளை குழப்புவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றனர்.
அணி திரண்டு போராட்டங்கள் மேற்கொள்வதன் மூலம் அரசாங்கத்தை மிரட்ட முடியாது."
தேர்தலை நடத்தக்கோரி கொழும்பில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் காட்டம்
தொடர்ந்து அவர்,
"முக்கியமான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி ஆகியவை தங்களது சுயநலன்களுக்காக மக்களைப் பலிக்கடாவாக்கப் பார்க்கின்றன.
நீதிமன்றம் ஊடாகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.
நீதிமன்ற தடை உத்தரவையே மீறும் ஜே.வி.பியினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி எப்படி நாட்டை ஆள முடியும்.
ஜே.வி.பியினரின் வீர வசனங்களை கேட்பதற்காகவே மக்கள் அவர்களின் கூட்டங்களில் பங்குகொள்ளுகின்றனர், இருப்பினும் தேர்தல் முடிவுகளில் ஜே.வி.பியினரின் நிலை கவலைக்கிடமாகவே அமைகிறது.
