ரணிலுக்கு மகிந்த வழங்கிய கால அவகாசம் : தவறின் எடுக்கப்படவுள்ள முடிவு
ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்து பெரமுனவிற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.
வாக்குறுதியளித்தபடி அதிபர் 25 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் வெற்றிகரமாக இணைத்துக் கொண்டால், எதிர்வரும் அதிபர் தேர்தலில் மொட்டு அவருக்கு ஆதரவளிக்கும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜூன் 15 ஆம் திகதிக்குள் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால், ஜூன் 16 ஆம் திகதி அதிபர் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் மொட்டு இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ரணிலுக்கு கால அவகாசம்
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பல மாநாடுகளை ஜூலை மாத இறுதியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அக்கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksha)அந்த மாநாட்டில் தமது கட்சியின் வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அறியமுடிகிறது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள அதிபர் ரணிலுக்கு(ranil wickremesinghe) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கால அவகாசம் நிறைவடைந்த பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் வேட்பாளர் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கணிசமான எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அரசாங்கத்தின் பல பலமான அமைச்சர்கள் கடந்த காலங்களில் அரசியல் மேடைகளில் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் அதிபர் தேர்தலில் முன்வைக்கப்படும் வேட்பாளர் தொடர்பில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம்(sagara kariyawasam) தெரிவிக்கையில்,
முன்னிலையில் தம்மிக்க பெரேரா
வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் தொடரும் என அவர் தெரிவித்தார். அதிபர் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரப் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் மாநாடுகளும் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுன அதிபர் வேட்பாளர் ஒருவரை முன்வைத்தால், அதற்கு முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா(dhammika perera)வின் பெயர் கட்சித் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |