இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய! ரணிலின் சதி முயற்சிகள் அம்பலம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களின் கோரிக்கைக்கு மாறாக சாமர்த்தியமாக அதிபராவதற்கு முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ரணிலின் சூழ்ச்சி
மதத் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் சிறி லங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகிய இருவரையும் பதவி விலகல் செய்யுமாறு கோருவதுடன், பிரதமர் விக்ரமசிங்க அதிபராக வருவதற்கு முயற்சிப்பது நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் பதவிலியிருந்து கோட்டாபய பதவி விலக முன் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும். எனினும் ரணில் பதவி விலகாவிடின், கோட்டாபய ரணிலை பதவி நீக்கம் செய்துவிட்டு தானும் பதவி விலக வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் சகல துறைகளும் முடங்கியுள்ளதுடன் கடந்த சில மாதங்களாக குழப்பங்களும் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தன. இதற்கு பொறுப்பாகிய கோட்டாபய மற்றும் ரணில் அமைதியின்மையை ஏற்படுத்தாமல் பதவி விலகுமாறும் மக்களின் கோரிக்கைக்கு பிரதமர் செவிசாய்த்து இனி எந்த நெருக்கடியையும் தவிர்க்க வேண்டும் என்றும் அனுரகுமார கேட்டுள்ளார்.
மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் புதிய அதிபராகவதற்கு பிரதமர் விக்ரமசிங்க சதி செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை சிறிலங்காவிலிருந்து மாலைதீவுக்கு விமானப் படையின் உதவியுடன் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் வெளியேறியதை பிரதமர் அலுவலகமும், விமானப்படையும் உறுதிப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலையிலேயே பிரதமர் ரணில், அதிபராவதற்கு சூழ்ச்சிகளை மேற்கொள்வதாக அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.