ரணில் விக்ரமசிங்க பலவந்தமாக அதிபராகவில்லை : ஐ.தே.க சுட்டிக்காட்டு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பின்னால் சென்று அதிபர் பதவியை ரணில் விக்ரமசிங்க பலவந்தமாக பெற்றுக் கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க அண்மையில் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பொதுஜன பெரமுன விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையிலேயே, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அழைப்பை ஏற்று மாத்திரம் ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கோரிக்கை
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு நாட்டை மீட்டெடுப்பதற்காக பொதுஜன பெரமுன தமது கட்சித் தலைவரின் ஆதரவை கோரியிருந்ததாக பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிபர் பதவியை ஏற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் ஜனநாயகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றம்
மேலும், சிறிலங்கா அமைச்சரவையில் ரணில் விக்ரமசிங்க பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பதவிகளை மாத்திரம் அவர் மாற்றியதாகவும் பாலித ரங்கெ பண்டார கூறியுள்ளார்.
அத்துடன், விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.