உலகத் தலைவர்களை ஒரே புள்ளியில் சந்திக்கவுள்ள ரணில்..!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரித்தானியாவுக்கு புறப்படவுள்ளார்.
மகாராணி எலிசபத்தின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு லண்டன் செல்லவுள்ளார்.
இதேவேளை, மகாராணி எலிசபத்தின் இறுதி நிகழ்வில் அனைத்து உலகத் தலைவர்களையும் ஒரு நேரத்தில் சந்திக்கும் வாய்ப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ளது.
தேசிய துக்க தினம்
பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அத்துடன், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என சிறிலங்காவின் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.