ரணில் அடுத்த வாரம் ஜேர்மனிக்கு விஜயம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கியூபாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் அடுத்த வாரம் ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேர்லின் உலகளாவிய உரையாடலின் முதல் நாளில் தலைவர்களின் கலந்துரையாடலில் பங்கேற்று ரணில் விக்ரசிங்க உரையாற்றவுள்ளார்.
கியூபாவில் நடைபெற்ற G77 உச்சி மாநாடு மற்றும் ஐ.நா பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (24)நாடு திரும்பியிருந்தார்.
உத்தியோகபூர்வ விஜயம்
இந்த நிலையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் செல்லும் ரணில் விக்ரமசிங்க, ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ் மற்றும் ஏனைய அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை தீர்க்கும் ஜேர்மனியின் உயர்மட்ட உலகளாவிய முயற்சியாக ஆரம்ப பேர்லின் உலகளாவிய உரையாடல் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம்
ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ்சை தவிர ஐரோப்பிய பேரவை தலைவர் சார்ள்ஸ் மைக்கேல் மற்றும் பெல்ஜிய பிரதமர் அலெக்ஸ்சாண்டர் டி குரூய் ஆகியோர் இந்த உரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
அதிபரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, அதிபரின் மூத்த ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் நிதியமைச்சரின் ஆலோசகர் தேஷால் டி மெல் ஆகியோர் பெர்லினில் இரண்டு நாள் தங்கியிருக்கும் போது ஜேர்மனின் சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதேவேளை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாளைய(25) அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணைக்கான நிதியை வழங்குவது தொடர்பான மீளாய்வுகளுக்காக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார்.