ரணில் ஒருபோதும் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாக்க மாட்டார்: வஜிர அபேவர்த்தன வலியுறுத்து
ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கமாட்டார்.
எதிர்க்கட்சியினர் இந்த விடயத்தில் சந்தேகப்படத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க இடமளிக்க வேண்டும்.
அதைவிடுத்துத் தூக்கிலிடப்பட வேண்டிய மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகளான கோட்டாபயவையும், பிள்ளையானையும் பாதுகாக்க அதிபர் முயற்சிக்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும்போதே வஜிர அபேவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சர்வதேச விசாரணை
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளக சுயாதீன விசாரணைகள் இடம்பெறும் என்றும், ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் அதிபர் எம்மிடம் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் அதிபர் விசாரணை ஆணைக்குழுவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் சுயாதீன விசாரணைகளை நடத்தி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும். தேவையேற்படின் சர்வதேச விசாரணையை நாட முடியும்” என தெரிவித்துள்ளார்.