அதிபராக ரணிலின் முதலாவது வடக்கு பயணம் - எதிர்ப்பு போராட்டத்திற்கு தயார்நிலை
அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன் முறையாக நாளைய தினம் வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வவுனியாவிற்கு நாளை (19) பயணம் மேற்கொள்ளும் அதிபர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் எதிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பல்வேறு சந்திப்பு

நாளை வவுனியா மாவட்டத்திற்கு பயணமொன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முதலாவது நிகழ்வாக அரச உயர் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் கிராம சேவையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் வட மாகாணத்திற்கான அதிபர் நல்லிணக்க செயலகத்தின் இணைப்பு செயலகமொன்றையும் வைரவபுளியங்குளத்தில் திறந்து வைக்கவுள்ளார்.
எதிர்ப்பு போராட்டம்

அதிபரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிபரின் நிகழ்வு இடம்பெறும் பகுதிகளில் தனியார் வகுப்புக்கள் மற்றும் நிகழ்வுகளை நாளைய தினம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறான சூழலில் அதிபர் நாளை மறுதினம் 20 ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கும் பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.