மக்களுக்கு எதிரான ரணிலின் செயற்பாடு - எதிரணி கடும் எதிர்ப்பு
போராட்டக்காரர்களுக்கு எதிராக ரணிலின் நடவடிக்கை
ராஜபக்சர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பதை நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சமிந்த விஜேசிறி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“ரணில் விக்ரமசிங்க வீட்டுக்குச் சென்றதை மறந்து போயுள்ளார், கடந்த பொதுத் தேர்தலில் வீட்டுக்குச் சென்றவர் தேசியப்பட்டியலில் மூலமே பிரவேசித்தார்.
கொழும்பு மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் ரணில் விக்ரமசிங்க எத்தனை வாக்குகளைப் பெற்றார் என்பது கூட எனக்குத் தெரியாது. தனிப்பட்ட விருப்பு வாக்குகளை எடுக்க முடியவில்லை.
மக்கள் போராட்டத்தை நகைப்பாக பார்த்து எடைபோட முற்பட்டால்..
இன்று ராஜபக்சர்களை பாதுகாக்க முன் வந்துள்ளார். ராஜபக்சர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து, மக்கள் போராட்டத்தை நகைப்பாக பார்த்து எடைபோட ரணில் முற்பட்டால் அதற்கு இந்த நாட்டு மக்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை.
எனவே இந்தப் போராட்டத்திற்காக முன் நின்ற மக்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது, நம்பிக்கை இருந்தது, கோரிக்கைகள் இருந்தன, அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் இன்னும் அப்படியே இருக்கின்றன.
கூண்டில் அடைக்கப்படுவதை நாட்டு மக்கள் விரும்பப்போவதில்லை
ஆனால் போராட்டத்தால் எழும் பல்வேறு பிரச்சினைகளை ஒடுக்கும் வகையில் அதிபராக ரணில் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
நீச்சல் தடாகத்தில் குளித்தவர்களையும், அந்த மாளிகையைத் தாக்கிய குழுக்களையும் பார்த்து, இவர்களையெல்லாம் வேவு பார்த்து தண்டிக்கச் செல்கிறார்.
ராஜபக்சர்களை அடித்து விரட்டிய, ராஜபக்சர்களின் அதிகாரத்தை விரட்டியடித்த இந்நாட்டு பிரஜைகள் கூண்டில் அடைக்கப்படுவதை நாட்டு மக்கள் ஒருநாளும் விரும்பப்போவதில்லை” என்றார்.
