அரசாங்கத்திடம் ரணில் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
நாட்டில் உள்ள ஒரே தேசிய வளம் மனித வளம் மட்டுமே எனவும், அந்த வளத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் தேசிய வளம் இரும்பு, சிமெந்து அல்லது இயந்திரம் அல்ல என தெரிவித்த முன்னாள் பிரதமர், இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேற வரிசையில் நிற்கின்றனர் எனவும், அந்த தேசிய வளத்தை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவதற்கு அடுத்த 20 வருடங்களுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஐந்து மடங்காக அதிகரிக்க வேண்டும் எனவும், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த குறுகிய மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்னும் 10 வருடங்களில் ஓய்வூதியம் வழங்குவதற்கு நாட்டில் பணம் இல்லாமல் போகும் என்று கூறிய அவர், நாட்டின் முக்கிய பிரச்சனை டொலர் பற்றாக்குறை என்றும், கடன்களால் வங்கிகள் நலிவடையும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
