ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை! விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா?
தனது நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாவதை தடுக்கும் வகையில் எழுத்தானை ஒன்றினை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிக்கும்.
தனது நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த மார்ச் 2 ஆம் திகதி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேன் முறையீட்டு நீதிமன்றில் அவர் இந்த ரிட் மனுவினை (எழுத்தாணை மனு) தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண ஊடாக தாக்கல் செய்துள்ள இம்மனுவில், பிரதிவாதிகளாக நாடாளுமன்ற செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுவில், கடந்த ஜனவரி 12 ஆம் திகதி, நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக தனக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் விதித்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான பின்னணியில், தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதி இல்லை என சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக ஜனவரி 19 ஆம் திகதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், எனினும் நாடாளுமன்ற செயலர் இதுவரை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என நம்பகரமான தகவல்கள் ஊடாக தான் அறிந்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே தனது நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு குறித்த ரிட் மனுவூடாக ரஞ்சன் ராமநாயக்க கோரியுள்ளார்.