தனுஷ்கோடி வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை
தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் கரை வலை மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் வலையில் வாயில் இரும்பு தூண்டிலுடன் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை கடற்றொழிலாளர்கள் உயிருடன் மீட்டு பத்திரமாக கடலில் விட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன், உச்சிப்புளி, சேராங்கோட்டை மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலுதவி சிகிச்சை
இந்நிலையில் இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இன்று (25) கடற்றொழிலாளர்கள் கரை வலை மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடற்றொழிலாளர்களின் வலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் அரிய வகை கடல் வாழ் உயிரினமான சித்தாமை ஒன்று வாயில் இரும்பு தூண்டில் மாற்றியவாறு உயிருடன் சிக்கியுள்ளது.

இதை அறிந்த கடற்றொழிலாளர்கள் வலையில் இருந்த பிற மீன்களை பிரித்து எடுத்து விட்டு வாயில் இரும்பு தூண்டிலுடன் உயிருடன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆமையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக கடலில் உயிருடன் பாதுகாப்பாக விட்டுள்ளனர்.
அழிவின் விளிம்பு
ஆமையின் வாயில் சிக்கிய இரும்பு தூண்டில் கடற்றொழிலாளர்கள் மீன் பிடிப்பதற்கு தூண்டிலில் மீனை மாட்டி கடலில் போட்ட போது அது ஆமையின் வாயில் சிக்கி நீண்ட நாட்களாக ஆமை அவதிப்பட்டு வந்திருக்காலாம் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலில் பாதுகாப்பாக விடப்பட்டதை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் காணொளி எடுத்து மீன்பிடிவலைகளில் சிக்கும் ஆமைகளை மீண்டும் பத்திரமாக கடலில் விட வேண்டும் என விழிப்புணர்வு பதிவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த பதிவு தற்போது அதிக அளவு பகிரப்பட்டு வருகின்ற நிலையில், தமிழக அரசின் வனத்துறை சார்பில் அழிவின் விளிம்பில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை பத்திரமாக மீட்டு கடலில் விடும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கும் பரிசுத் தொகையை வழங்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |