யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல் : அதிகரிக்கும் தொற்றாளர்கள்
புதிய இணைப்பு
யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் நோய்
கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ் மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதுவரை ஏறத்தாழ 6000 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ் மாவட்டத்திற்கு நாளை வருகை தரவுள்ளது - என்றார்.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் (Vavuniya) எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் (16.12.2024) யாழ் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எலிக்காய்ச்சல் தொற்று
எனினும் அவருக்கு காய்ச்சல் சுகமாகாத காரணத்தால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவருக்கு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஆறுமுகம் கேதீஸ்வரன் (Arumugam Ketheeswaran) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |