சமர்க்களநாயகன் பால்ராஜிற்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன்: கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜை நாடாளுமன்றில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் நினைவு கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள நாடாளுமன்றத்திற்கு அருகே இன்று(09.06.2026) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே 18(18.05.2026) அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வெளிப்படுத்திய கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன,
ரவிகரன் வெளிப்படுத்திய கருத்து
“எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்தவர்.
உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.
நினைவுகூறப்பட்டார் பால்ராஜ்
இந்நிலையில் இந்த விடயத்தை அடிப்படையாக வைத்து தென்னிலங்கை தரப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியதாவது, “ நாடாளுமன்றத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு சார்ந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக துரைராசா ரவிகரன் என்ற எம்.பியால் நினைவுகூறல் முன்னெடுக்கப்பட்டது.
அதில் பிரிகேடியர் பால்ராஜ் நினைவுகூறப்பட்டார்” என தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை அளிக்க போராட்டக்காரர்கள் முயன்றபோது, காவல்துறைக்கும் அவர்களுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |