ஜப்பானுடன் மீண்டும் கடல் மார்க்கமாக கைகோர்க்கும் ரஷ்யா
ரஷ்யா மற்றும் ஜப்பானுக்கிடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி ரஷ்யாவின் விளாடிவொஸ்டாக் நகரில் இருந்து சுமார் 940 கி.மீ தொலைவில் ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நானோ துறைமுகத்திற்கு இடையேயே இந்தக் கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெறவுள்ளது.
இந்த இரண்டு துறைமுகங்களிற்கு இடையேயும் வாரந்தோறும் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பத்தில் நடந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உறவில் ஏற்பட்ட விரிசல்
கொரோனா கட்டுப்பாடு மற்றும் இருநாடுகளிற்கிடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல் போன்ற காரணங்களால் இந்த கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 2020-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க தற்போது ரஷ்யா அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அனுமதியினைத் தொடர்ந்து தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சொகுசு கப்பலொன்று தனது சேவையை ரஷியாவில் ஆரம்பித்துள்ளது.
200 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்தக் கப்பல் தற்போது 43 பயணிகளுடன் உத்தியோகபூர்வமாக தனது பயணத்தினை ரஷ்யாவில் இருந்து ஆரம்பித்துள்ளது.
குறித்த கப்பலானது தென்கொரியாவில் உள்ள டொங்கே துறைமுக நகரத்தில் நின்றுவிட்டு பின்னர் ஜப்பான் நாட்டிற்கு புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.