அரசியல் பழிவாங்கலை எதிர்கொள்ள நாம் தயார் - நளின் பண்டார
அரசாங்கம் பயங்காரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களைப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாகவும், எனினும் அதனைக் கண்டு அஞ்சப்போவது இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறான ஒரு பின்னணியிலேயே ரிசாட் பதியுதீன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“கடந்த காலங்களில் ரிசாட் பதியுதீன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டபோது நாம் இது அரசியல் பழிவாங்கல் எனத் தெரிவித்தோம். இந்தக் கைதுகளின் போது நீதிமன்றம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தே தீர்ப்புகளை வழங்கியது.
அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் சித்திரவதைக்கு தயாராகின்றது. ஒரு பக்கம் கைதுகள், ஒரு புறத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியும், சண்டியர்களை பயன்படுத்தியும், காவல்துறையில் தனக்கு நெருக்கமானவர்களை பயன்படுத்தியும் தமது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள நாம் தயார்” என்றார்.