தமிழரசுக் கட்சியுடன் இணைய தயார்...! கஜேந்திரகுமார் எம்பி அதிரடி அறிவிப்பு
தமிழரசுக் கட்சியுடன் (ITAK) இணைந்து பயணிக்க தயாராக உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
வடமராட்சி - நெல்லியடியில் தமிழ்த் தேசிய பேரவை நடத்திய மே தினக் கூட்டத்தில் (01.05.2025) பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த உள்ளாட்சி சபைகள் தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக - ஆணித்தரமாக தங்கள் வாக்குகளை செலுத்தாது விட்டால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டு விட்டார்கள் என்று சந்தேகிக்கப்படுவது உறுதியானதாகி விடும்.
முகங்களுக்கு வாக்களிக்கும் தேர்தல்
ஒரு முறை மாறிப்போடலாம் - அதை நியாயப்படுத்தலாம். அடுத்ததடுத்த தேர்தல்களிலும் இவ்வாறு நடந்தால் அதனை நியாயப்படுத்த முடியாது.
அந்த வகையில் இது சாதாரண உள்ளாட்சி தேர்தல் அல்ல. முகங்களுக்கு வாக்களிக்கும் இந்தத் தேர்தல் தான் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக மாறியுள்ளது.
இது கஷ்ட காலமாகும். எனவே எமது மக்கள் ஆழமாக சிந்தித்து எமது வாக்குகளை செலுத்த வேண்டும்.
தவறான கொள்கையை கைவிட்டு
தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையில் இன்று இரு முக்கியமான விடயங்கள் உள்ளன. ஒன்று இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் மற்றது இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணுதலாகும்.
இந்த விடயங்களில் ஜே. வி. பி. என்ற தேசிய மக்கள் சக்திக்கும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த இனவாத கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
நாம் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல. தலைமைத்துவம் தவறாக நடப்பதால் ஒட்டுமொத்த கட்சியும் தவறான பாதையில் கொண்டு செல்லும் நிலைமைதான் இன்று உள்ளது.
அந்தக் கட்சிக்குள் இருக்கும் நேர்மையானவர்கள் சரியான முடிவை எடுக்க இந்தத் தேர்தல் ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டுமானால் - கட்சிக்குள் இருக்கும் அவர்கள் விவாதத்தை உருவாக்க வேண்டுமானால் எந்த அளவுக்கு தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு தமிழ் அரசுக் கட்சியும் ஓரங்கட்ட வேண்டும்.
தவறான கொள்கையை கைவிட்டு
அப்படி ஒரு தெளிவான பாடம் கற்பித்தால் மட்டும் தான் தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய நேர்மையான உறுப்பினர்கள் மேலோங்க முடியும். தவறான தலைவர்களை வெளியேற்ற முடியும்.
இது தமிழ் அரசுக் கட்சியை தோற்கடித்து - முற்றுமுழுதாக ஓரங்கட்டும் செயல்பாடு அல்ல. அப்படி செய்ய முடியாது - செய்யவும் கூடாது.
தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையை கைவிட்டு - அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் - அந்தக் கட்சியின் தவறான தலைமைத்துவத்தை மாற்றி - திருத்தி சரியான பாதைக்கு அவர்கள் வருவதாக இருந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
