ரோஹித்திற்கு பதிலாக ஹர்திக்: உண்மையை கூறிய தலைமை பயிற்சியாளர்
மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராக ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது ஏன் என தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருட இறுதியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. இதற்கு முன்னதாகவே, வர்த்தக சாளரம் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை வாங்கியதோடு, அணித்தலைவராகவும் நியமித்ததது.
அணித்தலைவர் பதவியில் இருந்து, ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை அவரது ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் உண்மையான காரணத்தை விளக்கியுள்ளார்.
எதிர்கால திட்டம்
"என் கருத்துப்படி, இது முற்றிலும் கிரிக்கெட் முடிவு. ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டுவருவதற்கான வழியையும் பார்த்தோம். இது அணியின் எதிர்கால திட்டங்களின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட முடிவாகும்.
இந்தியாவில் பலருக்கு இது புரியவில்லை. மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக எடுத்துக்கொண்டனர். ஆனால் சில சமயங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். இது வெறும் கிரிக்கெட் முடிவு என்று நினைக்கிறேன்.
ரோஹித் சர்மா ஒரு சிறந்த வீரர். அவர் களத்தில் அவரது துடுப்பாட்டத்தை ரசித்து, நல்ல ஓட்டங்களை எடுக்கட்டும். ரோஹித் சர்மா மிகவும் நல்ல ஆளுமை கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாக அணித்தலைவராக இருந்து வருகிறார்.
மிகப்பாரிய பொறுப்பு
மும்பை இந்தியன்ஸ் அணியின் அணித்தலைவராக சிறந்த சாதனை படைத்துள்ளார். இப்போது இந்தியாவையும் வழிநடத்துகிறார். அவர் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்.
கடந்த சில சீசன்களில் ரோஹித் அதிக ஓட்டங்கள் குவிக்கவில்லை. ஆனால் அணித்தலைவராக அவர் சிறப்பாக செயல்படுகிறார். இந்திய அணியின் அணித்தலைவராக அவருக்கு மிகப்பாரிய பொறுப்பு உள்ளது.
ஆனால் ஐபிஎல்லில் விளையாடும் போது ரோஹித்தின் தோள்களில் இந்தப் பொறுப்பை சுமத்த நாங்கள் விரும்பவில்லை. இந்த முடிவின் மூலம் ரோஹித் ஷர்மாவை சிறந்த முறையில் பார்க்க முடியும்.
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ரோஹித் மகிழ்ச்சியாக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் ” என மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |