இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ரத்து செய்த நாடு! காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்
இலங்கை நாட்டவர்கள் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாத நுழைவு வசதியை ரத்து செய்ய தாய்லாந்து எடுத்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், தாய்லாந்து அரசாங்கம் உலக நாடுகளுக்கான தனது விசா நடைமுறைகளை மறுஆய்வு செய்து, இலங்கை உட்பட 60 நாடுகளுக்கான விசா விலக்கு வசதியை திரும்பப்பெற முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விசா இல்லாத வசதியைத் தவறாகப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டதை தாய்லாந்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
சிறப்பு விசா நடைமுறை
குறிப்பாக, பௌத்த பிக்குகள் தாய்லாந்திற்குள் குஷ் வகை போதைப்பொருளைக் கொண்டுவர முயன்ற சமீபத்திய சம்பவத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தப்பட்ட விசா விலக்கு மற்றும் வருகையின் போது விசா பெறும் வசதி (Visa on Arrival) தொடர்பான அறிவிப்புகள் ஓகஸ்ட் 31 அன்று தாய்லாந்தின் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து இலங்கை அரசு தாய்லாந்து அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அப்போது, இலங்கைக்கு சிறப்பு விசா நடைமுறையை வழங்குவதற்காக புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள தாய்லாந்து அரசு முன்மொழிந்துள்ளது.
வேலைவாய்ப்பு ஒப்பந்தம்
இதற்கான வரைவு ஒப்பந்தம் தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, அடுத்தகட்டமாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 14 அன்று தாய்லாந்து செல்லவுள்ளார்.
தனது இந்தப் பயணத்தின் போது, முன்மொழியப்பட்டுள்ள புதிய இருதரப்பு விசா நடைமுறை குறித்தும் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |