அதிர்வினால் உடைந்து விழும் மந்திரிமனை... வர்த்தகரின் அட்டுழியம் : சாடும் ஈபிடிபி
மந்திரிமனையின் வடக்கு பக்கத்திலே இருக்கக் கூடிய காணி தனியார் வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டு அங்கே அவருக்குச் சொந்தமான கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வாகனங்களை இயக்குகின்ற போது ஏற்படும் அதிர்வினால் மந்திரிமனை பாதிக்கப்படுவதுடன் அது இடிவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வட மாகாண சபையிலே பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக செயலாளர் ப. ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”மந்திரிமனை போன்ற இவ்வாறான விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், எங்களுடைய தொன்மை இங்கே நிரூபிக்க வேண்டும் என்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது.
சங்கிலியன் சிலையை புனரமைத்ததிலிருந்து யாழ் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி தமிழ் மன்னர்களுடைய சிலைகளை அமைத்து இந்த மன்னர்கள் எல்லாம் எங்களுடைய மண்ணை ஆட்சி செய்திருக்கின்றார்கள் என்பதை எதிர்காலச் சந்ததிக்கும் வெளியில் இருந்து வருபவர்களுக்கும் ஒரு செய்தியாக சொல்லியிருக்கின்றோம்.
மந்திரிமனையினுடைய இடிபாடு என்பது வேதனையான விடயம். அது சரியான முறையில் பராமரிக்கப்படாமையே காரணம் எனச் சொல்லப்படுகின்றது.
இது தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. வடமாகாண சபைக் காலத்திலே வடக்கு மாகாண சபையிலே இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜாவும் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.
மந்திரிமனையின் வடக்கு பக்கத்திலே இருக்கக் கூடிய காணித்துண்டு தனியார் வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டு அங்கே அவருக்குச் சொந்தமான கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
அந்த வாகனங்கள் தினமும் எழுப்புகின்ற ஒலி அல்லது அந்த வாகனங்களை இயக்குகின்ற போது ஏற்படும் அதிர்வினால் இந்த மந்திரிமனை பாதிக்கப்படுகின்றது. அது இடிவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வட மாகாண சபையிலே பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சரியான முறையிலே கவனிக்கப்படவில்லை. தற்போது கூட அந்த மந்திரிமனையை பாதுகாப்பதற்கு ஒரு வர்த்தகர் தான் தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
அதைவிட இவ்வாறான விடயங்களை பாதுகாப்பதற்கு தொல்லியல் திணைக்களத்திற்கு பெரிய கடப்பாடு இருக்கின்றது. அந்த தொல்லியல் திணைக்களம் சரியான முறையிலே செய்திருக்க வேண்டும்.
எங்கே பௌத்த சின்னங்கள், பூர்வீக கல்வெட்டுக்கள் இருக்கின்றன என்று தேடிக்கொண்டிருக்கின்ற தொல்லியல் திணைக்களம் இவ்வாறான விடயங்களை பாதுகாப்பதில் ஒரு அசமந்தப் போக்காக இருக்கின்றதா என்ற பலமான சந்தேகம் கூட இருக்கின்றது.
தற்போது இருக்கின்ற தரப்புக்களாவது அதை பாதுகாக்க வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
