பிள்ளையானால் ரணிலின் பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அசோக ஆரியவன்ச உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றிய அசோக ஆரியவன்சவை உடனடியாக இடமாற்றம் செய்ய காவல்துறை தலைமையகம் இன்று (01) நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, இன்று (மே 1) முதல் காங்கேசன்துறை காவல்துறைக்கு குறித்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
ரணிலின் முயற்சி
இந்த நிலையில், அவரின் இடமாற்றத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை தொடர்பு கொள்ள முயற்சித்தமையே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இடமாற்றம் பெற்றுள்ள அதிகாரி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவருக்கு அழைப்பு விடுத்து, ரணில் விக்ரமசிங்க, காவலில் உள்ள பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த விடயம் காரணமாகவே ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
