கிளிநொச்சியில் செயலிழந்த நிலையில் துப்பாக்கிகள் மீட்பு
கிளிநொச்சி - குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி - தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலையின் பின் பகுதியில் உள்ள காணியில் துப்பாக்கிகள், பெருமளவான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த வெடிபொருட்கள் தொடர்பில் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலுக்கமைய , தர்மபுரம் காவல்துறையினர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று இன்றைய தினம் அகழ்வு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது ரி 56 ரக துப்பாக்கிகள் , வெடிபொருட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிகள் மற்றும், வெடிபொருட்கள் ஆகியன செயல் திறனுடன் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தர்மபுரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரம் காவல்துறையினருடன் இணைந்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவத்தினரும் அகழ்வு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.








