முன்பள்ளிக் கல்வி முறையில் அநுர அரசு ஏற்படுத்தவுள்ள மாற்றம் : வடக்கு ஆளுநர்
இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதில் விசேட அக்கறை செலுத்தி வருவதாகவும் இத்திட்டம் முழுமையடையும்போது முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
காரைநகர் - அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் இன்று (25) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்பள்ளிக் கல்வி
அவர் மேலும் தெரிவிக்கையில், “பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் முன்பள்ளிக் கல்வியே முக்கிய பங்காற்றுகின்றது. அதுவே சிறந்ததொரு எதிர்காலச் சமூகத்துக்கான அத்திவாரமுமாகும்.

பெற்றோர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இடங்களை விட, நல்ல பழக்கவழக்கங்களைப் போதிக்கும் இடங்களிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். சிறுபராயத்தில் அவர்கள் பழகும் நற்பண்புகளே அவர்களைச் சமூகத்தில் சிறந்தவர்களாக வழிநடத்தும்.
இலங்கையில் முன்பள்ளிகள் வெவ்வேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டுள்ளன. இதனைச் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
வடக்கு மாகாண சபையால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதாது என்பதை நான் அறிவேன். தற்போதைய நிலையில் அதனை உடனடியாக அதிகரிக்க முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் அரசாங்கம் இதனை ஒரு நிரந்தரக் கட்டமைப்புக்குள் கொண்டு வரும்போது இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும்.” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், காரைநகர் பிரதேச செயலாளர், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர், காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர், தீவக வலயக் கல்வி (முன்பள்ளிகள்) உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |