முன்னாள் வடமாகாண ஆளுநர் தற்போதைய பதவியிலிருந்து விலகினார்
முன்னாள் வடமாகாண ஆளுநரும் தற்போதைய இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ரெஜினோல்ட் குரே இன்று தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
தனது அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனத்தைக் கையளித்துவிட்டு இன்று மதியம் 12.30 மணியளவில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபன வளாகத்தை விட்டு அவர் வெளியேறியுள்ளார்.
அரச ஊடக நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உயர் பதவிகளில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரது இராஜினாமா இடம்பெற்றுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் பதவியிலும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்க இலங்கை தேசிய நூலகத்தின் தலைவர் சோனாலா குணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரு தலைவர்களின் பதவிகளும் மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இலங்கை தேசிய நூலகத்தின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படவிருந்தார்.
எனினும், இன்று தனது இராஜினாமாவை கையளிக்கும் போதே, அவ்வாறான பதவி மாற்றத்தில் தாம் ஆர்வம் காட்டவில்லை என ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.