வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதை - ஆளுநருக்கு பறந்த எம்பியின் கடிதம்
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்துதருமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (05.01.2026) திகதியிட்டு குறித்த கடிதம் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொன்மை மிக்க வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்து தர ஆவன செய்யுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரலாற்று தொன்மை மிக்க வெடுக்குநாறிமலை
இது தொடர்பிலான கோரிக்கையினை ஏற்கனவே தங்களுக்கு தாம் விடுத்துள்ளதாகவும் எனினும் எதுவித திருப்திகரமான பதிலும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த ஆலயத்திற்கு செல்லும் பாதையினை வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு விடுவித்து தரும் பட்சத்தில் குறித்த பாதையினை தம்மால் புனரமைக்க முடியுமென வவுனியா வடக்கு பிரதேசசபையினரும் தெரிவித்துள்ளனர்.
எனவே தாங்கள் இவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து குறித்த வரலாற்று தொண்மைமிக்க ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையினை மிகவிரைவாக விடுவித்துத்தர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |