இலங்கைக்கு வந்துக்குவியவுள்ள பாரிய டொலர் வருமானம்!
வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கை தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணம் இவ்வாண்டின் இறுதியில் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வாண்டில் மாத்திரம் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதிகரிக்கும் அமெரிக்க டொலர்கள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஓகஸ்ட் மாத இறுதியில் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலம் 5.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இது நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகும்.
தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் இறுதியில் எதிர்ப்பார்த்ததை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது“ என தெரிவித்தார்.
தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் தொடர்பிலும் அவர் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
புதிய வசதிகள் அறிமுகம்
“நாங்கள் புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். வெளிநாடு செல்வதற்காக ஏதேனும் ஒரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு பணம் செலுத்தினால் அதற்கான பற்றுச்சீட்டை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம்.
அதன்படி, குறித்த பற்றுச்சீட்டு இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
