விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - உரம் இறக்குமதிக்கான தடை நீக்கம்
நாட்டில் இரசாயன உரம் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கம் குறித்த அறிவிப்பு அடங்கிய கடிதத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கையொப்பமிட்டு வங்கிகளின் பிரதானிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இரசாயன உரம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை எக்காரணத்தைக் கொண்டும் மீளப்பெறப்படாது என பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அறிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த சேதனப் பசளை திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறியிருந்தார். எனினும் திடீரென இரசாயன உரம் இறக்குமதி தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்.
விவசாயிகளின் பயிர்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இருந்தபோதும் இரசாயன உரம் இறக்குமதிக்கான தடை மீளப்பெறப்படாது என உறுதியாகக் கூறிய அரசாங்கம் தற்போது தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இராசாயன உரம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அளித்துள்ளது.
அதன்படி ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இரசாயன உரம் இறக்குமதி செய்யக் கூடிய அளவிலான ஏற்பாடுகளை நிதி அமைச்சு முன்னெடுத்துள்ளது.