தியாகி திலீபனின் உருவச்சிலை அகற்றம்: தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்
நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில், அவரது 39ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நிறுவப்பட்ட உருவச்சிலை இலங்கைப் காவல்துறையால் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
தியாகி திலீபனின் உருவச்சிலை நிறுவப்பட்டதிலிருந்து, அதனை அகற்றுமாறு அரச மற்றும் அதிகார அமைப்புகள் ஏற்பாட்டாளர்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்ததாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், உருவச்சிலை நிறுவப்பட்டமைக்கு எதிராக சில தரப்பினரால் இனவாத கருத்துகளும் எதிர்ப்புகளும் வெளிப்படுத்தப்பட்டதாகவும் தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
திலீபனின் நினைவு நிகழ்வு
கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் திலீபனின் நினைவு நிகழ்வுகளைத் தடுக்கும் அல்லது ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அரச அதிகார அமைப்புகள் ஈடுபட்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறியுள்ள தமிழ் சிவில் சமூக அமையம், இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ் மக்களின் தேசிய உரிமைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படும் நினைவுகூரும் உரிமையைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |