சங்கானை இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை! உறுதியளித்த தமிழ் எம்.பி
சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், “சுழிபுரத்தில் 30 வருடமாக நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு அந்த காணியின் உரியவர்களான பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரிடம் ஒப்படைத்து இருக்கின்றோம்.
பொதுமக்களின் கோரிக்கை
சங்கனை கிழக்கு பகுதியிலும் ஒரு இராணுவ முகாம் அமைந்திருக்கின்றது. அது தனியாரின் காணி. அந்தக் காணியையும் பொதுமக்களிடம் கையளிக்குமாறு நாங்கள் இராணுவத்திடம் கோரி இருந்தோம். அவர்கள் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக கூறினார்கள்.

மேலும் இன்றைய கூட்டம் சமூகமாக நடைபெற்றது. சென்ற கூட்டமானது நடைபெற்றபோது கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. அதன்போது, பொதுமக்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். நாங்கள் அவற்றை சாதகமாக பரிசீலிக்கின்றோம்.
இங்கே தீர்வு காணப்படக்கூடிய விடயங்களுக்கு இங்கே தீர்வை கண்டு, மேலதிகமாக ஏதாவது விடயங்கள் இருந்தால் அவற்றை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு கொண்டு சென்று அதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |