முந்திரிப்பருப்பை உடன் நீக்குங்கள் - அமைச்சர் நிமல் விடுத்த உத்தரவு
முந்திரிப்பருப்பை நீக்குங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து துறைமுகத்தில் வழங்கப்படும் உணவில் சுமார் 45% முந்திரிப்பருப்புக்குப் பதிலாக வேறு உணவைப் பயன்படுத்துமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
துறைமுக சமையலறையில் ஒரு நாளைக்கு சுமார் 450 ரூபா செலவில் 5,000 பகல் உணவுகளும் 3500 இரவு உணவுகளும் தயார் செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள சமையல் அறைகளுக்கு பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் இருந்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி சமையலறையை புனரமைப்பதற்கு அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பு துறைமுக பிரதித் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சமையற்காரர் இல்லை
சமயலறைக்கு சமையற்காரர் இல்லை எனவும், குறித்த வெற்றிடத்துக்கு உடனடியாக பொருத்தமான நபரை நியமிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
துறைமுக சமயலறையில் உள்ள உணவுப்பொருட்கள் பழங்கால எரிவாயு அடுப்பில் சமைக்கப்படுவதால் அதிகளவிலான எரிவாயு வீணாவதாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
துறைமுக சமயலறையில் 169 பணியாளர்கள் பணியாற்றினாலும் அவர்களுக்கு உரிய சுகாதார வசதிகள் இல்லை என்பதை அமைச்சர் கண்டறிந்து அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு துறைமுக அதிகார சபையின் பிரதித் தலைவர் கயான் அழகியவன்னவுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

