பிள்ளைகளின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரும் தாய்மார்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்சமயம் சிறையில் இருக்கும் பிள்ளைகளின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளனர் அவர்களது பெற்றோர்.
திருகோணமலையில் இன்று, முகநூலில் பதிவிட்டதன் அடிப்படையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்சமயம் சிறையில் இருக்கும் நபர்களின் பெற்றோர்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை ஒழுங்கமைத்து இருந்தனர்.
இதன்போது பாலகிருஷ்ணன் சுகுந்தகுமாரி கருத்து தெரிவிக்கையில், எனது மகனை (பாலகிருஷ்ணன் ரதிகரன் - 28 வயது) கடந்த வருடம் 27.11.2020 அன்று முகநூலில் கவிதை பதிவிட்டதற்கு கைது செய்ததாகவும், சுமார் ஒரு வருடமாக தன்னுடைய மகனை இழந்து தனது குடும்பம் அல்லல் உறுவதாகவும் குறிப்பிட்டார், அத்துடன் ஜனாதிபதியின் காலில் விழுந்து மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டு அழுதார்.
சண்முகராஜா கலைச்செல்வி கருத்து தெரிவிக்கையில், தனது மகன் விதுலக்ஸ்சன் (24 வயது) 2.07.2021 அன்று கைது செய்யப்பட்டதாகவும், அவரது உழைப்பில் தான் தங்களுடைய குடும்பம் இருப்பதாகவும், தனது மகனை மீட்டுத் தருமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
கிறிஸ்டி வினோத் லிஷாலினி கருத்து தெரிவிக்கையில்,
தனது கணவர் கிறிஸ்டி வினோத் (36 வயது) கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவதாகவும், இரண்டு பெண் பிள்ளைகளை கொண்ட தனது குடும்பம் தற்சமயம் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாகவும் குறிப்பிட்டார்.